இணைப்பில்

Wednesday, November 27, 2013

வெட்டி பிளாக்கர் நண்பர்கள் நடத்தும் வலைபதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி.

அனைத்து வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்.

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நமது ப்ளாக்கர் நண்பர்களுக்கு என்று ஒரு குழுமம் ஆரம்பிக்க வேண்டும் என்று சென்னையில் யூத் பதிவர் சந்திப்பு டிஸ்கவரி புக் பேலஸ்சில் நடைபெற்ற போது முடிவெடுக்கப்பட்டு அவ்வாறே வெட்டி பிளாக்கர் என்கின்ற பெயரில் குழு தொடங்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நம் பதிவுகளை பகிர ஒரு திரட்டியாகவும்நம் வலையுலக நண்பர்களுக்கு ஒரு நட்பு பாலமாகவும் திகழ்ந்து வருகின்றது…!

ஆனாலும் வலையில் எழுதுபவர்கள் குறைந்து வருகின்றார்கள்,அதிகமாக முகப்புத்தகத்தில் இருக்கின்றார்கள்சிலருக்கு இப்படி ஒரு வசதி இருப்பது தெரியாமல் முகநூலில் பெரிய இடுகைகளைக் கூட வெளியிடுகின்றார்கள் அவர்களின் கவனம் வலைப்பதிவின் பக்கம் திருப்புவதற்கு ஒரு சிறுகதைப் போட்டி நடத்தலாம் என்று நண்பர்களால் முடிவெடுக்கப்பட்டு நடத்தப்படுகிறது. உங்களுடைய திறமையை குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்கு பறைசாற்ற இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் சிறுகதைகள் புகழ் பெற்ற பல தமிழ் எழுத்தாளர்கள்,திரை இயக்குனர்கள் பதிப்பகத்தார்கள் என அனைவரின் பார்வையில் இருக்கின்றது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்;வெல்லுங்கள்.
  
பரிசுத் தொகை

முதல் பரிசு ரூ 5000

இரண்டாம் பரிசு ரூ 2500

மூன்றாம் பரிசு ரூ 1500

சிறப்பு பரிசு ரூ500 ஐந்து நபர்களுக்கு

விதிமுறைகள்.

1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)

2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.

3.இதுவரை எங்கும் வெளியாக கதைகளாக இருக்க வேண்டும்

4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5. கதைக்களம் இலக்கியம்க்ரைம்சஸ்பென்ஸ்நகைச்சுவை எதுவாகவும் இருக்கலாம். கட்டுப்பாடுகள் கிடையாது.

6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப்பிளாக்கர் அட்மின்கள் கலந்து கொள்ளக் கூடாது.


கதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்
----------------------------------------------------------------------------------------------

உங்களுடைய கதைகளை உங்கள் பெயர்வலைத்தள முகவரிஉங்கள்தொடர்பு எண்  குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு 25-11-2013 லிருந்து 25-12-2013 இரவு 12.00க்குள் அனுப்பவும். 
  • கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொதுவெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும். 
  • நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்படமாட்டாது
  • போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை வெளியிடக்கூடாது.
  • கதைகள் http://vettibloggers.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்


நடுவர்கள்
முதல் சுற்று நடுவர்கள்

கே.ஆர்.பி.செந்தில்
செங்கோவி
உணவுஉலகம் சங்கரலிங்கம்
மயிலன்
சிவக்குமார்
செல்வின்
தமிழ்வாசி
சங்கவி(சங்கமேஸ்வரன்)
வீடு.சுரேஷ்குமார்
முத்தரசு
ஆருர் மூனா செந்தில்

இரண்டாம் சுற்று நடுவர்கள்

பிச்சைக்காரன் (சாரு வாசகர் வட்டம்)
ராஜராஜேந்திரன் (சாரு வாசகர் வட்டம்)
செல்வேந்திரன்(விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)

மூன்றாம் சுற்று நடுவர்கள்

வாமுகோமு (எழுத்தாளர்)
வா.மணிகண்டன் (எழுத்தாளர்)
அதிஷா (புதியதலைமுறை நிருபர் வலைப்பதிவர்)

ஏதேனும் சந்தேகங்களெனில் vettiblogger2014@gmail.com  என்ற முகவரிக்கு மடல் வரைக

Thursday, November 7, 2013

Writer அதாவது எழுத்தாளர்



மிகுந்த அசூயையுடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார், நம் எழுத்தாளர். தமிழில் மட்டும் முப்பது புத்தகங்கள் எழுதித் தள்ளியிருக்கிறார். இந்த முப்பது புத்தகங்களையும், தன் முப்பது வயதிற்குள் எழுதிமுடித்திருக்கிறார். உலக மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழ் மொழியிலிருந்து உலகமொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்வது அவருக்குக் கைவந்த கலை.

அவரின் தோற்றத்தையோ, உடையின் நிறத்தையோ, போட்டிருக்கும் கண்ணாடியின் விலையையோ உங்களுக்கு நான் கூறப்போவதில்லை. அவ்வாறு கூறி, கதையின் பக்க அளவை நீட்டி முழக்குவதில் எனக்கு உடன்பாடும் இருந்ததில்லை.

கதையென்றால் அதன் போக்கில் எழுதவேண்டுமென்று எகிப்திய எழுத்தாளர் முஷ்கர் டி சொல்லுவார். முஷ்கர் அல்லது டி எழுதியவையனைத்தும் ஆகச்சிறந்த இலக்கிய முத்துக்கள். முஷ்கருடைய படைப்புகளில், தேவையின்றி ஒரு காற்புள்ளியோ, இல்லை அரைப்புள்ளியோ இடம்பெறாது. ஒரு சிற்பி, சிலையைச் செதுக்குவதுபோல் பார்த்துப் பார்த்து இலக்கியம் படைத்தவர்.

அவரின் மரணமும், மிகச் சுவாரஸ்யமான ஒன்று. சாவில் என்ன சுவாரஸ்யமென்று கேட்காதீர். அவருடைய எழுத்தைப்போலவே, அவரது மரணமும் இலக்கியத்தனமானதாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

தன் அறுபதாவது வயதில், தன் மூன்றாம் மனைவியுடன் கட்டிலின்பம் பெறும்போது உயிர் போய்விட்டதாம். கேட்கும்போதே “உச்” கொட்டத் தோன்றுகிறதா? கொட்டிவிடுங்கள்.

ஐயடா... 

நான் எழுதிக் கொண்டிருக்கும் கதை முஷ்கர் டி யைப் பற்றியதல்ல. இக்கதை நம் தமிழ் எழுத்தாளர் பற்றியது. நாற்பது வயதைக் கொஞ்சம் நரையுடன் நெருங்கிக்கொண்டிருக்கிறார். முன்பொருகாலத்தில் மீசை வைத்திருந்தார். இப்போதெல்லாம், மீசையை மழித்துவிடுவார் போலும்.

இதோ, கதையின் கருவுக்கே திரும்பிவிடுவோம்.

ஆம், நம் எழுத்தாளர் மிகுந்த அசூயையுடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்.

அவரின் திருமணத்துக்கு முன்புவரை, இலக்கியம், உரை, பத்தி என விரிந்த எழுத்துக்கள், இப்போதெல்லாம் மளிகைக் கணக்கு, வரவு செலவுக் கணக்குகள், குழந்தையின் வீட்டுப்பாடம் எனச் சுருங்கிப்போயிற்று என்று சொன்னால் அது மிகையாகாது.

அவரின் துணைவியார் அவ்வளவு பெரிய அரக்கி இல்லைதான். அரக்கியாய் இருந்திருந்தால், மேலே சொன்ன மளிகை, வீட்டுப்பாடம் போன்றவற்றை எழுதத்தான் சொல்வாளா? பேனாவைக் கையிலேடுத்தாலே மூச்’சென்று கத்தியிருப்பாள். முடிந்தால், பூரிக்கட்டையால் அடித்தே, எழுத்தாளரின் கையை முறித்திருப்பார். அதனால்தான் சொல்கிறேன்,
”அவரின் துணைவியார் அவ்வளவு பெரிய அரக்கி இல்லைதான்.” 

அவரது புத்தக வெளியீடுகள் எல்லாம், ஊரின் மீப்பெரும் உணவகங்களில் அல்லது கடலின் நடுவே அல்லது வானத்தில் பயணித்தபடியே அல்லது மலையின் உச்சியிலே அல்லது.....
இப்படி எங்கேனும் வித்தியாசமான இடங்களில் நடந்துகொண்டே இருக்கும்.
ஒருமுறை புளியமரத்தின் உச்சாணிக் கொம்பிலேறி வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான எழுத்தாளர்தான், மிகுந்த அசூயையுடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆறு வருடங்களாக, அதாவது, திருமணத்துக்குப் பின், இலக்கியங்கள் படிப்பது சுத்தமாக நின்றேவிட்டது, அவர் எழுதுவதை நிறுத்தியதைப்போல். காரணம்தான் தெரியுமே. ஆம்....
அவரது சகதர்மினியேதான்.

இவர் அவளுக்குத் தெரியாமல் தினசரி கூட படிக்க முடியாத நிலை. அவருக்குப் பேனா வேண்டுமென்றால்கூட மனைவியிடம்தான் கேட்கவேண்டும்.

அவரது மனம், இப்போதெல்லாம் புழுப்போல நெளிந்துகொண்டிருக்கிறது. தெரிந்ததை எழுதமுடியாமல், தெரியாததைப் படிக்கமுடியாமல்.......
மக்களை அடிமைப்படுத்தும் முறைகளில் திருமணமும் ஒன்று. அதை எதிர்த்துப் புரட்சி செய்யவேண்டுமென புழுங்கிக்கொண்டிருக்கிறார். அடிமையின் ஓலமாக, அவரின் இயலாமை நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.

நடைபிணமாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

என்றேனும் ஒருநாள் அவர்தம் மனைவி அவரை வீட்டில் விடுத்துப் போகட்டும், அந்த நன்னாளிலாவது அவளின் கோலப் புத்தகத்தை, பிரஞ்ச்சில் மொழிபெயர்த்துவிட வேண்டுமென்று பொருமிக்கொண்டிருக்கிறார், நம் எழுத்தாளர்.

-வெளங்காதவன்.

Wednesday, October 2, 2013

கொலை


இறக்கை இதழில் வந்த கதை.


சாயமேறிய அந்த நரையெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லைதான். ஆனாலும், நான் அவனைக் கொன்று கொண்டிருந்தது பிரச்சனையாக இருந்திருக்காது. பிரச்சனைகள் தீர்க்க இயலாமல்தான் என்னை நம்பி, கைக்கொண்டான். 
நான் அவனை தேர்ந்த கலைஞனைப்போல் கொன்று கொண்டிருந்தேன். அவன் தொண்டைதான் முதற்குறி. தொண்டை கமறக் கமறக் கொல்வது தனிச்சுகம். தொண்டை தாக்கிக் கொல்லவியலாமல் கொஞ்சம் நுரையீரல், கொஞ்சம் குடலெனப் பிரித்துக் கொண்டு கொல்லத் துவங்கினேன்.
இதோ, குடலிலிருந்த அமிலமெல்லாம் என்னைச் சூழ்ந்து கொண்டது. அமிலங்களின் வெம்மையால் அவன் வெகுநாட்களாக உண்டிருக்கமாட்டான் என உணரும்போதே, குடல் அமிலங்கள் மிக அடர்த்தியாக என்னைச் சூழ்ந்துகொண்டது.
அன்றொரு நாள் நான் கொன்றவன் பிரியாணி உண்டிருந்தது தூர மேகத்தின் நிழலாய் வந்துபோனது.
ஆம்...
நான் கொலைகாரன்தான். ஊரிலுள்ள எவரையும் கேளுங்கள். என்னைக் கொலைகாரனென்றே சொல்வார்கள். என்னைப் பிடித்து சிறையில் தள்ள எவனுக்கும் தைரியமில்லை. கொலைகளை ரசித்துச் செய்பவன். அந்தக் கொலைகளில்தான் என் ஆனந்தமிருக்கிறது. 
மீந்த நேரங்களில், அமைதியான நீரைப்போல் ஒரேயிடத்தில் அடைந்து கொண்டு. ஆனாலும், கொலை செய்வதென்றால் எட்டடிப்பாய்ச்சல்.
நான் கொல்ல முயற்சி செய்து, பிழைத்தவர்களில் இவனொருவனல்ல. 

ஆம், என் பணியை நான் மிகச் சிரத்தையாக, சிரமின்றியே நிறைவேற்றிவிடுவேன்.
ஒருவழியாய் என்னைக் கண்டு ஒழிந்துகொண்ட இவன் உயிரையும் குடித்துவிட்டேன். 
இதோ, நானும் மரிக்கப் போகிறேன். 
ஆம். என்னால் இறந்தவனின் இறுதிநாளே, எனது இறுதி நாளுமாம்.
கொன்றவனின் கை, கால், இதயமெங்கும் தாக்கி சக்கரவியூகத்தை உடைக்கத்தெரியாத அபிமன்யுவைப் போல, இந்த உடலிலேயே இறந்துவிடப்போகிறேன், விஷமாகிய நான்!

-வெளங்காதவன்

Thursday, August 29, 2013

போங்கடா போக்கத்த பயலுகளா! - மீள்பதிவு

மானங்கெட்ட ஊருய்யா......
இங்க இருந்து உசிரு வாழுறதுக்கு, எங்கியாவது\ போயி பிச்சை எடுக்கலாம்.....
திருட்டுக் கிழங்களும், கூட்டுக் களவாணிகளும், உயர்மட்ட அம்மைகளும் சேந்து அரசியல் நாடகங்கள ஆரம்பிச்சுட்டாங்க!
ஏலே, சின்ராசு!
எல்லாம் இனாமாமே?
ங்#$%தா, சரக்கும் சைட் டிஷும் தவிர மத்ததெல்லாம் இனாம்.....
ஆனா ஒண்ணுலே, நம்பட்ட ஆட்டையப் போட்டத, கொஞ்சம்னாலும் திருப்பிக் கொடுப்பானுங்கனு ஒரு நம்பிக்கை இருக்குலே.......
ஆமா, கேக்க மறந்துட்டேன்ல,
வெங்காயம் கிலோ என்ன வெலை?
ராசா, ராசா னு ஒருத்த(ன்)ர் இருந்தாரே, ஞாபகம் இருக்கா?
2 ஜி அலைக்கற்றைனா தெரியுமா?
ராமதாசு னு ஒரு மானஸ்தன், அந்தக் கட்சியோட கொள்கைகள் தெரியுமா?
ஊற்றிக் கொடுத்தவர்களுக்கும், குடித்தவர்களுக்கும் உறவு நிலை என்ன இப்போ?
ஏலே, சின்ராசு....
எங்கலே ஓடுத? பதில் சொல்லுலே.....
யோவ்.... சின்ராசு......
ஓடியே போயிட்டான் பயபுள்ள...



சரி சரி....
உங்களுக்கெல்லாம் சொல்லுறதுக்கு ஒரு மயிரும் மேட்டரும் இல்ல....
போய், ஓசில கெடைக்கிறத வாங்கிட்டு எவனுக்கோ ஓட்டுப் போட்டுட்டு, முடிஞ்சா அவங்களோட அடிய வருடி........................
போறதுக்கு முன்னாடி இன்னும் ஒண்ணு.....
கொஞ்சம் சோத்துல உப்பு சேர்த்துக்குங்க அப்பு!

-வெளங்காதவன்

Thursday, July 4, 2013

முத்தாய்ப்பு



இடம்-பழனி.
நாள்-இரண்டாயிரத்துப் பதிமூன்றாம் ஆண்டின் ஏதோவொரு மாதத்தின் ஏதோவொரு நாள்.

நைந்துபோன பையுடன் இருந்த அந்த வயதான பிச்சைக்காரர், அமர இடமின்றி ஒவ்வொரு படிகளாய் ஏறிக்கொண்டிருந்தார்.

கட்.

இடம்- நெகமம்.
நாள்- மிகச்சரியாக இருபத்தைந்து வருடத்துக்கு முன்பு.

“பாருடி. நம்ம பையன் மொதோ ரேங்கு வாங்கியிருக்கான்”, சரசுவிடம் காட்டிக் கொண்டிருந்தான் கருப்புசாமி.
“ஆமா, இங்க பாத்திரங்கழுவ நேரமில்ல. படிக்கிறதப் பாக்க நான் வாரேன்”, இருந்த வெறுப்பை வார்த்தைகளில் உமிழ்ந்தாள் சகதர்மினி.
“எங்கப்பந்தான் என்னிய படிக்க வக்கில.இவனாவது படிக்கவச்சு பெரிய ஆளா வரட்டுமே” தாயின் பேச்சைக் கேட்டு தளர்வாயிருந்த மகனை அரவணைக்கும்படி பேசினான் கருப்பு.
அந்தக் குடிசைக்குக் கதவெல்லாம் இல்லை. அடுப்புப் புகை கண்ணை கசக்க வைக்கும். ஆனாலும், கணேசன் பளீரெனச் சிரித்தபடி விளையாடப்போனான்.
“எங்க அப்பனை என்னால வச்சுக் காப்பாத்த முடியலை. இவன் படிச்சாவது நம்மைக் காப்பாத்தட்டுமே” மனைவியின் பதிலை எதிர்பாராமல் கருப்பு பேசியது முனகலாக கணேசன் காதுக்கு எட்டியது.

கட்.

இடம்- கோவை.
நாள்- இரண்டாயிருத்துப் பத்தின் ஆறாவது மாதத்தின் ஒரு வாரநாள்.

“யூ ஆர் செலக்ட்டேட்; கங்க்ராஜுலேசன்” நீட்டிய கையைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டிருந்தான் கணேசன்.

“தேன்க்யூ வெரிமச் சார், தேன்க் எ லாட்” வார்த்தை வராமல் நீர் மல்கப்பேசினான். கையை நீட்டியவர் அவன் கட்டுப்பாட்டிலிருந்து தன் கையைத் தனதாக்கிக் கொண்டார்.

கட்

இடம்- செஞ்சேரிமலை
நாள்- இரண்டாயிரத்துப் பன்னிரண்டு, கூதிர்கால மாதக் கடைசி.

“பெரியவா யாராவது வந்திருந்தா கூப்பிடுங்கோ. தாலி எடுத்துக்கொடுக்கணும்” ஐயர் அடிநாதமாக முழங்கினார்.
“வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்றோம் சாமி; நீங்களே தாலி எடுத்துக் கொடுங்கோ”வென வேண்டினான் கணேசன்.
அனைத்தும் முடிந்து, அவன் இல்லை இல்லை, அவர்கள் படியில் இறங்கிக்கொண்டிருந்தனர்.

கட்

இடம்-பழனி.
நாள்-இரண்டாயிரத்துப் பதிமூன்றாம் ஆண்டின் ஏதோவொரு மாதத்தின் ஏதோவொரு நாள்.

நைந்துபோன பையுடன் இருந்த அந்த வயதான பிச்சைக்காரர், அமர இடமின்றி ஒவ்வொரு படிகளாய் ஏறிக்கொண்டிருந்தார்.

-வெளங்காதவன்